ஆங்கிலமும் நானும்!
நான் இங்கிலாந்து வரும் வரை சுமாராக ஆங்கிலம் பேசி சுமாராக அதை புரிந்து கொள்ளும் திறமையுடன்தான் இருந்தேன். இப்பொழுதுகூட அப்படிதான் இருப்பதாக உங்களுள் ஒரு சிலர் சொல்வது என் காதில் விழுகிறது! இந்தியாவில் இருந்த வரை என்னுடைய ஆங்கில அறிவு போதுமானதாக இருந்தது. ஆனால் இங்கிலாந்து வந்த பிறகுதான் அதில் எந்த அளவு ஓட்டை இருக்கின்றது என்பது புரிந்தது.
இந்தியாவில் நாம் எந்த அளவு அமெரிக்க சினிமா படங்களின் தாக்கத்தில் இருக்கிறோம் என்பதை இங்கிலாந்து வந்த சில நாட்களிலேயே புரிந்து கொண்டேன். ஆங்கிலத்தில் படித்த புத்தகங்களும் பார்த்த சினிமாக்களும் நடைமுறை ஆங்கிலத்திற்கு தான் எவ்வளவு தூரம். மேலும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக, கணிதத்தை போலவோ அறிவியலை போலவோ கற்பதற்கும் அதை நடைமுறை வாழ்வில் பயன்படுத்துவதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள். முதலில் ஆங்கில உச்சரிப்பு நமக்கு வசப்பட வேண்டும். அவர்கள் உபயோகிக்கும் வார்த்தையின் அந்த குறிப்பிட்ட இடத்திற்கான அர்த்தம் நமக்கு பிடிபட வேண்டும். இதில் அவர்களின் சிலேடைகள், உவமானங்கள், வட்டார வழக்குகள் என பலப்பல மற்ற விஷயங்கள் வேறு.
மருத்தவம் படித்ததற்கு ஈடாக ஆங்கிலத்தை மீண்டும் படிக்க வேண்டிய கட்டாயம் இங்கிலாந்தில். Communication என்பது அவர்களை பொறுத்த வரை மருத்துவ அறிவுக்கு சமமான விஷயம். நோயாளிகளிடம் எப்படி பேச வேண்டும் எவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையை கூட மருத்துவ படிப்பு காலத்தில் நான் கற்றுக்கொள்ளாத நிலையில் இது எல்லாம் எனக்கு ஒரு வியப்பான விஷயமாகவே இருந்தது. இதெல்லாம் சரி. Communication அவசியம் தான். ஆனால் அதை இங்கிலாந்து மக்களிடம் செய்ய வேண்டும் என்றால் ஆங்கிலம் அவசியம் தானே. அங்கே தான் பிரச்சினை! நானும் என்னுடைய ஆங்கிலமும் இங்கிலாந்தில் என்ன பாடு பட்டோம் மற்றும் இங்கிலாந்துகாரர்களை எப்படி பாடு படுத்தினோம் என்பதை இங்கு பார்ப்போம்.
ப்ளீஸ் லிசன் James !
எங்களுடைய பரிட்சைக்காக நாங்கள் லண்டனில் இருந்து Glasgow சென்றோம். அங்கே க்ரீநோக் (Greenock) என்ற ஊரில் என்னுடைய நண்பரின் நண்பர் வீட்டில் தங்குவதாக திட்டம். அடுத்த நாள் Glasgow இல் இருந்து Edinburgh செல்ல வேண்டும் ( இந்த Edinburgh வின் பெயர் பலருக்கு சிம்ம சொப்பனம், அங்கேயே வருடக்கணக்கில் தங்கி வேலை செய்பவர்களுக்கு கூட). லண்டனில் இருந்து கிளம்பி எதிரில் உட்கார்ந்து இருக்கும் பாட்டியின் காலை நன்கு மிதித்து அதன் முறைப்பை வாங்கி கொண்டு ( இதெல்லாம் எங்க ஊர்ல சகஜம்ல ) ஒருவழியாக Glasgow வந்து சேர்ந்தோம். Glasgow ஆங்கிலத்தை பற்றி உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும். மொத்த கிரேட் பிரிட்டனிலேயே கடுமையான மொழி உச்சரிப்பு ( Accent ) Glasgow மக்களிடம்தான். பக்கத்து ஊர்காரர்களான Edinburgh வாழ் மக்களே இவர்கள் பேசும் பொழுது subtitle போட்டால் பரவா இல்லையே என்று எதிர் பார்க்கும் அளவுக்கு வெளுத்து வாங்கிவிடுவார்கள். நாங்கள் பாவம். இந்தியாவில் இருந்து விஜயகாந்த் பேசின இங்கிலிஷில் இருந்து இங்கிலிஷில் இருந்து இங்கிலிஷில் இருந்து இன்னும் மீளாத நிலை. லண்டனில் இருந்து Glasgow வரை டிக்கட் வேறு ஒருவர் எடுத்து கொடுத்துவிட்டார். அதனால் பரவாயில்லை. ஆனால் நாங்கள் இப்பொழுது Glasgow இல் இருந்து Greenock செல்ல டிக்கட் எடுக்க வேண்டும். டிக்கெட் விற்கும் அம்மாவிடம் சென்றோம். அதுவோ கண்ணாடிக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு பேசுகிறது. உண்மையாய் சொல்கிறேன் நண்பர்களே! சத்தியமாய் ஒரு வார்த்தை கூட புரியவில்லை. ரொம்ப நேரம் செலவு செய்து Greenock போக வேண்டும் என்று புரிய வைத்தாயிற்று. உடனே அந்த அம்மா முகத்தில் ஒரு பதட்டம். எங்கள் பின்னால் கையை காட்டி ஏதோ சொன்னார்கள். சுத்தமாக புரியவில்லை. Aawaas Anjing என்று விவேக் மலேசியாவில் மாட்டிகொள்வாரே அந்த நிலைமைதான். நான் திரும்பி பார்த்து மீண்டும் கௌண்டருக்குள் பார்த்தால் அந்த அம்மாவை காணோம். சற்று நேரத்தில் விறு விறுவென்று எங்களை பார்த்து நடந்து வந்து அவளை தொடருமாறு சொன்னது. பின்னால் போனால் ஒரு ட்ரைனை காட்டி ' யுவர் train ' என்றது. இப்பொழுதுதான் அது சொன்னது புரிந்தது (எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்ல. கௌண்டருக்கு பின்னால உட்கார்ந்து கிட்டு பேசுனா எப்படி. அதான் புரியல). எனக்கும் ஏன் நண்பருக்கும் இரண்டு வார்த்தை புரிந்ததே என்று அளவிலா மகிழ்ச்சி. Greenock சென்றவுடன்தான் தெரிந்தது அந்த ரயிலை விட்டிருந்தால் அங்கேயே தங்கி இருக்க வேண்டியது தான். அதுதான் கடைசி ரயில்.
சரி இப்பொழுது தலைப்புக்கு வருவோம். அந்த ரயில் பல ஊர்களில் நின்று செல்லக்கூடிய மெட்ரோ ரயில். ஒவ்வொரு ஸ்டேஷன் வரும் முன்னும் ஆங்கிலத்தில் அறிவிப்பு. (ராமா ! ஏன் இப்படி எங்களை சோதிக்கற !) அப்பொழுதுதான் கவனித்தோம் ! அந்த அறிவிப்பாளினி 'ப்ளீஸ் லிசென் James (Please listen, James) ' என்று ஒவ்வொரு முறை ஊர் பேரை சொல்லும் பொழுதும் சொல்லிக்கொண்டே வந்தாள். என்னுடைய நண்பரையும் நான் கலந்து கொண்டேன். எங்கே எனக்குதான் ஆங்கிலம் சரியாக தெரியவில்லையோ என்று. அவருக்கும் ஆங்கிலம் சரியாக தெரியவில்லை ! நமது ஊரில் ரயில்வே நிலையத்தில் ' பயணிகள் கவனத்திற்கு' என்று சொல்வது போல இவர்கள் ' ப்ளீஸ் லிசென் James ' என்று சொல்கிறார்கள் என்று ஒரு வழியாக முடிவு செய்தோம். இருந்தாலும் சந்தேகம். இறங்கியவுடன் கேட்டால்தான் தெரிந்தது ' Paisley Saint James ' என்று ஒரு ஊர் பேர்தான் 'ப்ளீஸ் லிசென் James ' என்று எங்கள் காதில் கேட்டது என்று. Pais என்பதை ப்ளீஸ் என்பது போல கூறியது அவர்கள் தவறு. ley யையும் Saint யையும் இணைத்து லிசன் எங்கள் காதில் விழுந்தால் நாங்கள் எப்படி பொறுப்பேற்க முடியும். அதுவுமில்லாமல் இந்த மாதிரியெல்லாம் பேர் வைக்க யார் சொன்னது. ஒரு ஊருக்கு இவ்வளவு பெரிய பெயர் தேவையா? முடிவாக நண்பர் அவர் நண்பரிடம் சொன்னார் ' மாப்ள , நல்ல வேல நீ க்ரீநோக் அப்படீன்னு ஈசியா பேர் புரியற ஊர்ல இருக்க. நீ மட்டும் அந்த James ஊர்ல இருந்திருந்தா நாங்க ரயில விட்டு இறங்கி இருக்கவே மாட்டோம்'.
சிங்கம் சிங்குளாதான் வரணுமா?
இந்த ரயில்வே லைனையே தொடர்ந்து பார்ப்போம். என் முதல் முதல் வேலை வாய்ப்பு சம்பந்தமாக பெட்போர்ட் ( Bedford ) என்ற ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது. நான் இங்கிலாந்து வந்து ஒரு சில மாதங்கள் ஆகியிருந்ததால் ஓரளவு மற்றவர் பேசும் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளும் நிலை. ரயில் நிலையம்! டிக்கெட் விற்பவர் ! வழக்கம் போல கண்ணாடிக்கு பின்னால் அவர் கண்ணாடி தடுப்புக்கு இந்த பக்கம் நான்! பெட்போர்டுக்கு ஒரு டிக்கெட். பீக் அல்லது ஆப்-பீக் ? என்றார். விவரம் தெரிந்தவர் ஒருவர் சொல்லி இருந்தார் ஆப்-பீக்கில் சென்றால் விலை கம்மி என்று. பரிட்சையில் எதிர்பார்த்த கேள்வி வந்தால் ஒரு சந்தோசம் வருமே அது போல உணர்ந்தேன். ஆப்-பீக் என்றேன். ஆப்-பீக் ரிடர்ன் ? என்றார். என்னடா இது, இந்த மதுரைக்கு வந்த சோதனை? என்று பாலையா கணக்கில் யோசித்து ஒரு மாதிரி மையமாக தலையை ஆட்டினேன். யூ வாண்ட் single ? என்றார். நான் என்னை சுத்தி பார்த்தேன். யாருமே இல்லை. அப்புறம் எப்படி இவர் single என்று கேட்கிறார். சரி குடும்பத்தை தள்ளி நிற்க வைத்து விட்டு டிக்கெட் வாங்க வந்து இருக்கிறேன் என்று நினைத்து விட்டார் என்று நானும் 'Single ' என்றேன். சிங்கம் எப்பவுமே சிங்குளா தானே போகும் என்ற டயலாக் அப்பொழுது இல்லை என்பதை இங்கே கவனிக்க.
டிக்கெட் வாங்கி, பெட்போர்ட் சென்று தெரிந்தவரை பார்த்தாயிற்று. அவரும் அடுத்த வாரம் வர சொல்லி விட்டார். திரும்ப லண்டன் ரயில்வே நிலையத்துக்கு வந்தாகி விட்டது. பெட்போர்ட் ரயில்வே நிலையத்தில் மின்சார தடுப்பு இல்லை. ரயிலிலும் யாரும் பரிசோதிக்கவில்லை. லண்டனில் இறங்கி தடுப்பை தாண்டி வெளியே வர வேண்டும் என்றால் டிக்கெட்டை உள்ளே நுழைக்க வேண்டும். நானும் நுழைத்தேன். திறக்கவில்லை. மீண்டும் மீண்டும் அடுத்தடுத்து இருந்த பல மெஷின்களில் நுழைத்து பார்த்தாயிற்று. ஊஹும்! அப்பொழுது எங்கிருந்தோ இதை பார்த்து கொண்டு இருந்த ரயில்வே நிலைய போலீஸ் வந்தார். எதுவும் பேசாமல் டிக்கெட்டை வாங்கி பார்த்தார். எங்க இருந்த வர்றீங்க என்றார். நானும் பெட்போர்ட் என்றேன். அவர் 'சார் ( இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல ) நீங்கள் Single (போக மட்டும் ) டிக்கெட்டை வாங்கி அதில் return (போக வர ) ஜர்னி பண்ணி இருக்கீங்க! அதனால உங்களுக்கு £80 பைன்' என்றாரே பார்க்கலாம். அது வரை Single , Single என்றால் கல்யாணம் ஆகாத பேச்சிலர் என்றே நினைத்து உபயோகித்து வந்த ஒரு வார்த்தைக்கு இன்னொரு அர்த்தமும் உள்ளது என்று புரிந்து கொள்ள எனக்கு £80 ஆனது.
மேலே கூறியது இரண்டே இரண்டு உதாரணங்கள் தான். இது போல பல. Leominster என்பதை எப்படி சொல்ல வேண்டும், நண்பர்களே! லியோமின்ஸ்தர்? அல்லது leomstar ? இந்த ஊர் கார்கள் இதை lemster என்று சொல்லுகிறார்கள். Bodenham என்ற ரோட்டை டாக்ஸி காரரிடம் சொல்லி புரிய வைக்க நான் பட்ட பாடு இருக்கே? Bodenham என்பதை 'போடணம்' என்றுதான் சொல்லுகிறார்கள். கேட்டால் 'English is a funny language ' என்று சொல்லி அவர்களே சிரித்துகொள்ளுவார்கள். எங்க ஊர்லல்லாம் "போடணும் ' என்ற வார்த்தையை சொல்வதற்கு சினிமாவில் ஹீரோவாகவோ அல்லது குறைந்த பட்சம் வில்லனாகவோ இருக்கவேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது போலும்.
இவ்வளவு நாட்கள் இங்கிலாந்தில் இருந்ததில் எனக்கு புரிந்தது இதுதான். Communication என்பதில் நான்கு நிலைகள் இருக்கின்றன. முதல் நிலை 'வாய் பேசாத காது கேளாத நிலை'. இந்த நிலையில் நீங்கள் சொல்வது யாருக்கும் விளங்காது அதே போல் மற்றவர்கள் சொல்வதும் உங்களுக்கு புரியாது. இரண்டாவது நிலை: ஒன்லி இன்கமிங் , நோ அவுட் கோயிங். இந்த நிலைப்படி நீங்கள் மற்றவர்கள் சொல்வதை ஓரளவு புரிந்து கொள்வீர்கள் ஆனால் நீங்கள் சொல்வது மற்றவர்களுக்கு ஹி ஹி ஹி ! மூன்றாவது நிலை: லிமிடெட் Offer . இதில் நீங்கள் சொல்வதும் புரியும் அவர்கள் சொல்வதும் புரியும் ஆனால் எல்லாம் ஒரு லிமிட்டிக்குள் தான். ஒரு சில நூறு வார்த்தைகளை வைத்துக்கொண்டு எப்படியும் சம்மாளித்து விடலாம். இல்லையானால் இருக்கவே இருக்கின்றது மருத்துவ வார்த்தைகள். போட்டு தாக்கி விட வேண்டும். மற்ற தொழில்காரர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்று தெரியவில்லை. கடைசி நிலை: முற்றும் துறந்த முனிவர்: இந்த நிலை வந்தவுடன் நாம் என்னதான் முக்கி முக்கி ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் மாதிரி முடியாது என்ற தெளிவினால் பிறக்கும் ஒரு மோன நிலை. இந்த நிலை வந்தவுடன் ஆங்கிலத்தில் பேசுகிறோம் என்று மறந்து ஆங்கிலத்தில் பேச தொடங்கி விடுவோம். எதிராளிக்கு புரிய வில்லை என்றால் அது அவர் கஷ்டம் என்ற ஒரு பற்றில்லாத உன்னத நிலைக்கு வந்து விடுவோம். நான் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறேன் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment